2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளை பொய்யாகி உள்ளது.
பாஜக அதிக இடங்களில் (238 தொகுதி) முன்னிலை பெற்றுள்ளபோதும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காததை அடுத்து பாஜக தொண்டர்கள் உற்ச்சாகம் இழந்துள்ளனர்.
2019ம் நாடாளுமன்ற தேர்தல் முன்னணி நிலவரம் தெரிய ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே வெற்றிக்களிப்பில் துள்ளிகுதித்த பாஜக இம்முறை எந்த ஒரு கொண்டாட்டத்திலும் ஈடுபடமுடியாமல் நடுக்கத்திலேயே உள்ளனர்.
பாஜக-வுக்கு அடுத்தபடியாக அந்த கூட்டணியில் அதிக இடங்களை தெலுங்கு தேசம் கட்சி பெற்றிருக்கிறது. இது 16 நாடாளுமன்ற தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகிய இருவரை நம்பிதான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் இந்த கூட்டணி ஆட்சிக்கு மோடி தலைமையேற்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
தவிர, இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக 1000க்கும் குறைவான வாக்குகள் மட்டுமே முன்னிலை இருப்பதை அடுத்து பாஜக-வின் வெற்றி எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மம்தா பானர்ஜியின் உதவியும் தேவைப்படும் நிலை ஏற்படும் என்பதால் கடிவாளம் போட்ட குதிரையாக ஓட மோடி தயாராக இருப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இருந்தபோதும், கடந்த பல ஆண்டுகளாக அரசியல் முகவரியை தொலைத்து விட்டு தேடிவந்த சந்திரபாபு நாயுடு இம்முறை நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.