டெல்லி: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,   முற்பகல் 11.30 மணி அளவிலான முன்னிலை நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.  அதன்படி   பாரதிய ஜனதா  கட்சி  238 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுடன்  ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.

543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அதற்கான போட்டிகள் நிலவி வருகிறது.

தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் இவிஎம் எண்ணிக்கை  நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது.  அதைத் தொடர்ந்து  இண்டியா கூட்டணி வந்துகொண்டிருக் கிறது. இதனால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை. 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. இதில் சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

நாடு முழுவதும் காலை 10 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாக உள்ளது. அதில், பாஜக 303  இடங்களிலும், காங்கிரஸ் 210 இடங்களிலும்,  முன்னணியில் உள்ளன. ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கும்போது, இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் இண்டியா கூட்டணிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

காலை 11.30 மணி நிலவரப்படி,  பாரதிய ஜனதா  கட்சி  238 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி 98 இடங்களிலுமை, சமாஜ்வாதி கட்சி 31 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. தற்போதைய நிலையில், பாஜக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகித்து வருகிறது.

ஊடகங்களின் தகவலின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.