டெல்லி: 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம் என பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியும் கூறி வரும் நிலையில், மத்தியில் ஆட்சி  அமைக்கப்போவது யார்?  என்ற எதிர்பார்பப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

2024க்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி உள்ளதுடன்,  முதலில் தபால் வாக்குகள் என்னப்படுகின்றன. எட்டு முப்பது மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அத்துடன்,  ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.

நண்பகல் 12 மணிக்குள் ஓரளவுக்கு முன்னிலை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இரண்டு மணிக்கு யார் பக்கம் ஆட்சி சாய்வது என்பது தெரிய வரும்.

வாக்கு கணிப்பு முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளன.  அதே வேளையில், வாக்கு கணிப்புகளைப் பொய்யாக்கி ‘இந்தியா’ கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என அக்கூட்டணியின் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆட்சியைக் கைப்பற்றினால், ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுவார்.