பெங்களூரு: பாலியல் வழக்கில் மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசிறையில் அடைக்க உள்ளனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கினார். இதுதொடர்பாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றார்.

பிரஜ்வல் ரேவண்னாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும், அவரை உடனே இந்தியா அழைத்து வரவும் மத்திய அரசை, மாநில முதல்வர் சித்தராமையா வலியுறுத்தி வந்தார். இதற்கிடையில், பிரஜ்வன் ரேவண்ணாவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ்  மற்றும்  பு கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணா சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது சித்தப்பாவும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, ரேவண்ணா தாயகம் திரும்புவதாகவும், வழக்கை எதிர்கொள்வதாகவும் அறிவித்தார். அதன்படி, அவர் நேற்று விமானம் மூலம் பெங்களூரு வந்த நிலையில், அவரை கைது செய்ய காத்திருந்த சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்தனர்.

அதாவது, ஹாசன் மக்களவைத் தொகுதிக்கான NDA வேட்பாளரான ரேவண்ணா, வாக்குப்பதிவு முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு ஏப்ரல் 27 அன்று ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜனதா தளம் (மதச்சார்பற்ற) அல்லது ஜேடி(எஸ்) தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா, வெகுஜன பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஜெர்மனியில் இருந்து வந்திறங்கியபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஜெர்மனியில் இருந்து பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று   மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.