டெல்லி: உலகம் முழுவதும் இருளை எதிர்த்துப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “1982-ல் ரிச்சர்ட் அட்டன்பர்க்கின் காந்தி குறித்த படம் வந்த பிறகுதான் முதல்முறையாக காந்தி பற்றி ஆர்வம் எழுந்தது. அந்தப் படம் எடுக்காமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது.” எனத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின்  இந்த கருத்து கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை  கருத்தை விமர்சித்து ராகுல் காந்தி விடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,  “உலகம் முழுவதும் இருளுக்கு எதிராகப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி. உண்மை மற்றும் அகிம்சையின் வடிவில், அநீதிக்கு எதிராகத் துணிந்து நிற்கும் பலவீனமான மனிதனுக்கும் தைரியத்தைத் தரும் பாதையை உலகுக்குக் காட்டியவர். அவருக்கு சான்றிதழ் தேவையில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதன்கிழமை மாலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மகாத்மா காந்தியைப் பற்றி அறிய ‘முழு அரசியல் அறிவியல்’ படித்த மாணவர் மட்டுமே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்” என்று கிண்டலாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.