டெல்லி: ‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் கைது செய்தது செல்லாது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டு உள்ளது.
நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புரகாயஸ்தாவை யுஏபிஏவின் கீழ் கைது செய்தது செல்லாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், அவரை கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக பிரபீர் புரகாயஸ்தவுக்கு வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.
சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியூஸ் க்ளிக் செய்தி இணையதளதின் நிறுவனர் பரபீர் புரக்யஸ்தா மற்றும் மனித வளத்துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த ஆண்டு ( 2023 அக்.,3 ) டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள்மீது, 2019 மக்களவைத் தேர்தலின் போது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான மக்கள் கூட்டணி (PADS) உடன் இணைந்து ஜனநாயக செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த புர்காயஸ்தா சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைப்பதற்காகவும், நாட்டின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதற்காகவும் சீனாவிடமிருந்து பெரும் தொகையை இந்த செய்தி இணையதளம் பெற்றதாக எஃப்.ஐ.ஆர்.ல் கூறப்பட்டது. இதன் காரணமாக, அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று( மே 15) உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில், பரபீர் புரக்யஸ்தாவை கைது செய்ததும், சிறையில் அடைத்தது செல்லாது. கைது செய்ததற்கான காரணத்தை, அவரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமோ அல்லது அவரது வழக்கறிஞரிடமோ கூறப்படவில்லை எனக்கூறிய நீதிமன்றம், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.