சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க அச்சம் உள்ளதாக கூறி உள்ளார்.

இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர், அஜித் பி. ஷா மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் என். ராம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர்.

இந்த கடிதம் கிடைத்தவுடனே அழைப்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இந்நிலையில் இதுவரை பிரதமர் மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அத்தகைய விவாதத்தை நடத்துவதற்கு நரேந்திர மோடிக்கு துணிவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மடியில் கனம் இருப்பதால் ராகுல்காந்தியுடன் விவாதிக்க மோடி தயாராக இல்லை.

மோடியை பொறுத்தவரை குஜராத் முதல்வராக இருந்த 11 ஆண்டு காலத்தில் சட்டமன்றத்திலோ, பிரதமராக பதவி வகித்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற எத்தகைய விவாதங்களிலும் அவர் பங்கேற்று கருத்து மோதல்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதில்லை. பிரதமர் மோடி பேசுவார், அதனை மற்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டும். எந்த கேள்விக்கும் நாடாளுமன்றத்தில் அவர் பதில் சொல்லியதில்லை.

கடந்த 10 ஆண்டு காலத்தில் மோடி ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. ஏனெனில் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிற துணிவை அவர் பெற்றிருக்கவில்லை. அதற்கு காரணம் அவரது அரசியல் பின்னணி தான்.

இந்நிலையில் இருக்கும் நரேந்திர மோடி நாள்தோறும் ராகுல்காந்தியை இளவரசர் என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டு பேசுகிறார். இந்தியாவில் மன்னராட்சியை ஒழித்த இந்திரா காந்தியின் பேரப் பிள்ளையாக இருக்கிற ராகுல்காந்தியை பார்த்து இளவரசர் என்று மோடி அழைப்பது மிகுந்த கேலிக்குரியது.”

என்று தெரிவித்துள்ளார்.