வளர்ச்சிக்கான திட்டம் மற்றும் கொள்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரே மேடையில் திறந்த விவாதம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகூர், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜித் பி. ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் நேற்று அழைப்பு விடுத்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி “ஆரோக்கியமான ஜனநாயகத்திற்காக ஒரே மேடையில் பிரதான கட்சிகள் தங்கள் பார்வையை நாட்டுக்கு முன்வைப்பது ஒரு நேர்மறையான முன்முயற்சியாக இருக்கும்.

காங்கிரஸ் இந்த முயற்சியை வரவேற்கிறது மற்றும் விவாதத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொள்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் பங்கேற்பார் என்று நாடு எதிர்பார்க்கிறது.

பிரதமர் இதற்கான தேதியை அறிவித்த உடன் இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜீன கார்கேவோ அல்லது நானோ இந்த விவாதத்தில் பங்கேற்க தயாராக இருக்கிறோம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.