சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 09) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேனும், வெயில் குறைந்த சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில், வானிலை ஆய்வு மையமும் அதை உறுதி செய்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் , தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (மே 09) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் மே 12ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 09) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ மே மாதத்தில், கத்திரி வெயிலின் உச்சத்தில் கடல் பக்கத்தில் இருந்து மேகங்கள் நகர்ந்து வருகிறது. தாம்பரம் பகுதிகளில் பெருங்களத்தூர் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. கொள்ளிடம், நன்னிலம், திருவாரூர், கல்பாக்கம், ராமநாதபுரம் என கடலோர பகுதிகள் அனைத்திலும் மழை பெய்து வருகிறது. மே மாதத்தின் நடுப்பகுதியில் பரவலான கனமழை பெய்யக்கூடும்” என்று பதிவிட்டுள்ளார்.