சென்னை: செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், அதை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். உரிமம் பெறாமல் வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பது தெரிய வந்தால், அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
கடந்த 5-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 4-வது லேன் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, தடை செய்யப்பட்ட ராட்லர் வகையைச் சேர்ந்த இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் தற்போது, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுபோல பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் ராதாகிருஷ்ணன், “நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது கட்டாயம். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் கிடையாது. அதனால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்றார்.
இந்த விஷயத்தில், அனைத்து தரப்பினரும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும். விலங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் மக்கள்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றவர் , அப்புறப்படுத்தப்பட்ட ராட்வீலர் நாய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.
மேலும், சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தை உரிய சட்டப்பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படு என்றவர், அந்த சிறுமிக்கு இன்று பிளாஸ்டிக் சர்ஜரி நடத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.
பின்னர் சிசிடிவி காமிரா செயலிழப்பு தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி செயலிழந்தாக கூறுவதில் உண்மையில்லை. வழித்தடத்தில் உள்ள சிசிடிவி மட்டும் பழுதானது அதுவும் உடனடியாக சரிச் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதை தொடர்ந்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறை களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அதன்படி, சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னையில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 300 பேர் மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப்பித்து இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், வீடுகளில் நாய்களை வளர்ப்போர் வளர்ப்பு நாய்களை முறையாக பரா மரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.