300க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் கடைசி நிமிடத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததை அடுத்து 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உடல்நிலை சரியில்லை என்று தகவல் அனுப்பிய விமான கேபின் ஊழியர்கள் தங்கள் மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ததையடுத்து அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தற்போது அந்த விமான நிறுவனத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விமான பணியாளர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தத்தால் சிக்கலை எதிர்கொண்டுள்ள நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதை அடுத்து அவர்களின் பயண டிக்கெட்டுகளுக்கான முழு தொகையை திரும்ப அளிக்கவும் அல்லது எந்த வித கட்டணமும் இன்றி வேறு தேதிக்கு மாற்றி வழங்கவும் முன்வந்துள்ளது.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் உள்ள பணியாளர்கள், டாடா குழுமத்துடன் இணைந்த பிறகு ஊழியர்களை சமமாக நடத்துவதில்லை என்று போராடும் ஊழியர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே டாடா குழுமத்தின் விஸ்டாரா விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த மாதம் இதேபோன்று ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததை அடுத்து அந்நிறுவன விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தற்போது டாடா குழுமத்தின் மற்றொரு விமான சேவை நிறுவனத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.