நிர்மல், தெலுங்கானா
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புவதாக கூறி உள்ளார்.
நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலங்கானாவின் அடிலாபாத் (எஸ்டி) தொகுதிக்குட்பட்ட நிர்மல் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
ராகுல் காந்தி தனது உரையில்,
“நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில் நடக்கும் போட்டி. காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறது. பாஜக – ஆர்எஸ்எஸ் இணைந்து அரசியலமைப்பையும், மக்களின் உரிமையையும் முடிவுக்கு கொண்டு வர விரும்புகின்றன. மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர். அவர் இட ஒதுக்கீட்டை உங்களிடமிருந்து பறிக்க விரும்புகிறார். இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து அதிகரிப்பது தான் நாட்டின் முன் உள்ள பெரிய பிரச்சினை.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை தற்போது உள்ள 50 சதவீதத்தில் இருந்து அதிகப்படுத்தும் என்று தேர்தல் அறிக்கையில் நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். ஆனால் பாஜக தலைவர்கள், இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். மோடி அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கினார். பாஜக தலைமையிலான அரசு கொண்டு வந்த ஒப்பந்த முறை, இடஒதுக்கீட்டை நீக்குவதாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள ஒப்பந்த முறைகளை நீக்குவோம். நிரந்தர வேலை வாய்ப்புகள் உருவாக்குவோம். தற்காலிக வேலை வாய்ப்புகளை இல்லை.
நரேந்திர மோடி இது வரை தனது பேச்சில் இட ஒதுக்கீட்டில் உள்ள 50 சதவீத தடையை நீக்குவோம் என்று கூறியதே இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி அதனை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம் என்று பாஜக தலைவர்கள் நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளனர். அரசியல் சாசனம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால், இடஒதுக்கீடு நீக்கப்பட்டுவிடும். பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்கவே பாஜக விரும்புகிறது.
என்று உரையாற்றி உள்ளார்.