காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரே பரேலி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மே 20ம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குபதிவின் போது தேர்தல் நடைபெற உள்ள இந்த தொகுதியில் பாஜக-வின் தினேஷ் பிரதாப் சிங் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தாகூர் பிரசாத் யாதவ் ஆகியோர் ராகுல் காந்திக்கு எதிரான முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
2004ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சோனியா காந்தி சமீபத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, ஏப்ரல் 26 ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெற்ற வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
அதேவேளையில் அமேதி தொகுதியில் இருந்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கே.எல். சர்மா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியின் தற்போதைய எம்.பி. யான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை அடுத்து இவ்விரு தொகுதியிலும் வெற்றிபெற்றால் எந்த தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
தவிர, ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ரே பரேலி, அமேதி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய பிரியங்கா காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.