சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலியான விவகாரம் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் இருந்து கொல்லம் சென்ற  விரைவு ரயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தவறி விழுந்து  பலியான விவகாரத்தில் தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி செவிலியர் பட்டதாரியான கஸ்தூரிக்கும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பட்டதாரியான தென்காசி மாவட்டம் மேலநீழிதநல்லூரைச் சேர்ந்த சுரோஷ்குமாருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(மே 5) வளையகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக கொல்லம் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் ரயில் சென்றுள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை (வியாழக்கிழமை)  பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கொல்ல விரைவு ரயில், உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் இடையே சென்றுகொண்டிருந்த போது,  கஸ்தூரிக்கு வாந்தி வந்துள்ளது. உடனே அவர் உறவினர்கள் உதவியுடன் பயணம் செய்த பெட்டியில் இருந்த கை கழுவும் இடத்திற்கு வந்து வாந்தி எடுத்தப்படி நின்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி  விழுந்தார். இதனை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தும் ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யாததால் பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அதற்குள் ரயில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்றுவிட்டது.

இதையடுத்து,  ரயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள், கணவர் ஆகியோர் தண்டவாளம் வழியாக,  கர்ப்பிணி பெண் தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்த போது அவர் கிடைக்கவில்லை.  இதனால், கர்ப்பிணி பெண்ணின் உறவினர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் கர்ப்பிணியை மீட்டு தருமாறு கதறி அழுதனர்.

இதையடுத்து ரயில்வே போலீசார் விரைந்து சென்று கர்ப்பிணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உளுந்துர்பேட்டையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில், ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இறந்த  கர்ப்பிணியின் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீசார்,  வாந்தி எடுத்த கஸ்தூரி,  நிலைதடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளது தெரிய வந்துள்து என  தெரிவித்து உள்ளனர். இருந்தாலும்,  கர்ப்பிணி கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம், ரயில் பெட்டியில் அபாய சங்கிலி செயல்படாத புகார் குறித்தும், பலியான பெண் ஏன் ரயில் பெட்டியின் கதவு அருகே சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தவும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்கள் மட்டுமே  ஆனதால் திருக்கோவிலூர் கோட்டாட்சியர்  விசாரணை நடத்த ரயில்வே  போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.