ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழை மாவட்டம், கேரளா .
சூரபத்மன் என்பவன் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். அவனை அழித்ததால், இரத்தம் பெருகி, ஒரு துளிக்கு ஒரு அசுரர் வீதம் உருவாகி உலகை நாசமாக்கினர். இத்தகைய மாயக்காரனான சூரனை அழிக்க ஏழு மாத குழந்தையால்தான் (தமிழகத்தில் சிறுவனாய் இருந்த போது சூரனை அழித்ததாகச் சொல்வோம். கேரளாவில், ஏழு மாதக் குழந்தை என்கிறார்கள்) முடியும் என்ற நிபந்தனையுடன் அவனுக்கு பிரம்மனால் வரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து உருவாக்கிய ஆறு பொறிகள் இணைந்து, கார்த்திகேயன் என்ற குழந்தை உருவாயிற்று.
இக்குழந்தையை ஏழுமாதம் வரை பார்வதி பாதுகாத்தாள். பின்னர் இக்குழந்தை பற்றி அறிந்த சூரன் அதை அழிக்க வந்தான். விஸ்வரூபம் எடுத்த அக்குழந்தை சூரனை அழித்தது. பின்னர் வளர்ந்த அக்குழந்தை பல லீலைகளைச் செய்தது. தந்தைக்கே பாடம் கற்றுக் கொடுத்தது. படைக்கும் தொழிலை சிலநாள் ஏற்றுக் கொண்டது. பல தலங்களுக்கும் சென்றது. பரசுராமர் உருவாக்கிய கேரளாவிற்கு அக்குழந்தை சென்ற போது வெற்றி வீரரான அச்சிறுவனை வாழ்த்திப் பாடல்கள் பாடி வரவேற்றார் விஷ்ணு. அப்பாடல்கள் “ஹரிப்பாடல்கள்” எனப்பட்டன. அவர் பாடிய இடத்திற்கு “ஹரிப்பாடு” என்ற பெயர் உண்டாயிற்று. தன் மருமகனை அத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும்படி விஷ்ணு கேட்டுக் கொண்டதன்படி முருகன் அத்தலத்தில் அமர்ந்தார்.
ஹரிப்பாடு முருகன் ஒருமுகம் கொண்டவர். எப்போதும் திருநீறு அல்லது சந்தனக்காப்பில் மிளிர்வார். கேரளாவில் இருப்பதால் முறையான பூஜைகள் உண்டு. கோயில் வாசலில் பெரிய மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் 70 அடி உயரமுடைய மிகப்பெரிய கொடிமரம் வரவேற்கும். இராஜகோபுரமும் இருக்கிறது. இக்கோபுரத்தின் கீழே பதிந்துள்ள காலடிகள் முருகனுடையதாகக் கருதப்படுகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் சாந்நித்யம் பெற்றதாக இக்கோயில் கருதப்படுகிறது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கோயில் ஒன்று இங்கிருந்தது. கி.பி.1096ல் இங்கு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. மூல விக்ரகத்தைத் தவிர மற்ற அனைத்தும் எரிந்து விட்டது. தற்போதைய கோயில் அதன்பிறகு எழுப்பப்பட்டது. முருகனுக்கு திருமணம் முடியும் முன்பே அமைந்தகோயில் என்பதால் வள்ளி, தெய்வானை இல்லை. கணபதி, தெட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், தர்மசாஸ்தா, யக்ஷி, குருதிக்காமன், பஞ்சமி ஆகிய தெய்வங்கள் பிரகாரத்தில் உள்ளன. பொதுவாக கோயில்களில் காலை நேரத்தில் கொடியேற்றப்படும். குறிப்பிட்ட சில கோயில்களில் மாலை நேரத்தில் கொடியேறும். அத்தகைய கோயில்களில் இதுவும் ஒன்று.
இக்கோயிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவிலுள்ள மண்ணாற சாலையில் நாகராஜா கோயில் உள்ளது. இது புகழ்பெற்ற பாம்புக்கோயிலாகும்.
திருவிழா:
எல்லா மாத கார்த்திகை நட்சத்திரத்திலும் விசேஷ பூஜை உண்டு. ஆவணி, மார்கழி, சித்திரை மாதங்களில் பத்துநாள் விழா நடத்தப்படும். பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இருப்பிடம் :
ஆலப்புழையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் இக்கோயில் உள்ளது. சேலத்தில் இருந்து ஆலப்புழைக்கு பஸ்கள் உள்ளன. மதுரையில் இருந்து திருநெல்வேலி, கொல்லம் வழியாகவும் ஆலப்புழை செல்லலாம். பெங்களூரிலிருந்து நாகர்கோயில் செல்லும் ரயிலில் காயங்குளம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியும் ஹரிப்பாடு செல்லாம்.