இந்திய மக்களின் தங்கத்தையும் தாலியையும் அபகரித்து முஸ்லீம்களுக்கு வழங்கப்போவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்து பெண்களின் புனித சின்னமான தாலி மற்றும் இந்திய குடும்பங்களில் செல்வத்தின் முக்கிய கலாச்சார சின்னமான தங்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி மத ரீதியிலான வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள மோடியின் இந்த பேச்சு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்று அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளையில், 2023 – 24 ம் ஆண்டில் இந்தியர்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து 1 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கியுள்ளனர். இது 2018 – 19ம் ஆண்டைவிட ஐந்து மடங்கு அதிகம் என்று ஆர்.பி.ஐ. தரவுகள் மூலம் தெரியவருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தி பிரிண்ட் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கடினமான பொருளாதார நெருக்கடி காலங்களில் மட்டுமே இந்திய குடும்பங்கள் தங்கள் குடும்ப நகைகளை அடமானம் வைக்கும் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்.
இந்த நிலையில் கோவிட் மற்றும் அதன் தொடர்ச்சியாக மக்கள் தங்கள் தங்கத்தை அடமானம் வைப்பது அதிகரித்து வருவது இந்திய பொருளாதரம் மிகவும் கவலைகரமாக உள்ளதயே காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவில் தங்கம் இறக்குமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்துள்ளது. இது இந்திய நுகர்வோரின் வருமானம் மற்றும் சேமிப்பின் நிலையை உணர்த்துவதாக உள்ளது.
மன்மோகன் சிங் ஆட்சியை ஒப்பிடும்போது தங்கத்தின் நுகர்வு மோடியின் ஆட்சியில் குறைந்திருப்பதையும் கடன் வாங்குவது அதிகரித்திருப்பதயுமே தரவுகள் காட்டுகின்றன.
கொரோனா காலத்தில் கைதட்டுங்கள் விளக்கு ஏற்றுங்கள் என்று தனது இயலாமையை மறைக்க மக்களை திசைதிருப்பிய மோடி தற்போது தேர்தல் நேரத்தில் மத துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யுரைகளை கூறிவருகிறார்.