டெல்லி: அமலாக்கத்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; அடாவடித்தனம் கூடாது என லாலு குடும்பத்தினர் தொடர்பான வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் அடிப்படையாக அமையும். அதனால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். அமலாக்கத்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; அடாவடித்தனம் கூடாது என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்கண்டித்து உள்ளது.
மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகளல்ல் கைது செய்யப்பட்டு, ஜாமினில் உள்ள முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர் களுடன் பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையினரின் நடவடிக்கையை நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
இந்த வழக்கில், பண பரிவர்த்தனை செய்ததாக தொழிலதிபர் கத்யால் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவருக்கு உடல்நலப் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்த, கத்யால், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவ மனையில் உடல் குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல்நலம் தேறி வருகிறார்.
இந்த நிலையில், தனது இடைக்கால ஜாமினை நீடிக்க கோரி கத்யால் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், கத்யாலுக்கு சிகிச்சை அளித்து வந்த அப்பல்லோ மற்றும் மேதாந்தா மருத்துவமனை மருத்துவர்களிடம் வாங்கிய வாக்குமூலங்களையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வாதாடிய, கத்யாலின் வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறையினரின் நடவடிக்கை, பிரிவு 50 PMLA இன் கீழ் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கையை மீறுவது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமையான மருத்துவ சிகிச்சையின் தனியுரிமையில் ஊடுருவுவதாகவும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதைதொடர்ந்து, கருத்து தெரிவித்த, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி (பிசி சட்டம்) விஷால் கோக்னே, அமலாக்கத்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், மருத்துவர்களை பிரிவு 50 PMLA-ன் கடுமையான செயல்முறைக்கு உட்படுத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்தார்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் குடிமக்களுக்கு என உரிமைகள் உள்ளன. அதேபோல் அரசுக்கும் சில கடமைகள் உள்ளன. இந்த அடிப்படை உரிமையை மாற்ற முடியாது என்று கூறிய நீதிபதி கோக்னே, “ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் அடிப்படை யாக அமையும். அதனால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். சட்டம் மற்றும் நீதிமன்றங்களுக்குப் பொறுப்பான ஒரு நிறுவனமாக அமலாக்கத்துறை இருக்க வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரங்களைத் தனக்கென உருவாக்க முடியாது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். அதேபோல் நீதிமன்றங்கள் இதுபோன்ற விஷயங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என தெரிவித்தார்.