அமராவதி: ஆந்திரா மாநிலத்தில், தெலுங்குதேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. மோடியின் புகைப்படம் இல்லாமல் , சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், வெளியிடப்பட்ட என்டிஏ கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக பிரமுகர் வாங்க மறுத்து விட்டார்.
ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இருப்பினும், கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திரப் பிரதேச தேர்தல் பார்வையாளருமான சித்தார்த் நாத் சிங், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோருடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விழா மேடையைப் பகிர்ந்து கொண்டபோதும், ‘அதில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாததால், சலசலப்பு ஏற்பட்டது. தேர்தல் அறிக்கையில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதனால், தேர்தல் அறிக்கை வெளியிட்டின்போது, தேர்தல் அறிக்கையை வாங்க சித்தார்த் நாத் சிங் மறுத்துவிட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது..
நாடு முழுவதும் மக்களவை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில் மற்ற கட்ட தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இந்த நிலையில்,ஆந்திர மாநிலத்தில், மக்களவை தேர்தலுடன், சட்டமன்ற மன்றத் தேர்தலும், மே 13ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில், 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மேலும், சட்டமன்றத்தில் 175 இடங்கள் உள்ளன, அதில் 29 இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் (எஸ்சி) ஏழு இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் (எஸ்டி) ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மக்களவை தேர்தலுடன் 16வது சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு மே 13 அன்று ஒரே கட்டமாக நடைபெறும் , மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4, 2024 அன்று நடைபெற உள்ளது.
அங்கு, ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஜன சேனா கட்சி (ஜேஎஸ்பி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகிய கட்சிகளின் மகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும் சில சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி, ஷர்மிளா தலைமையில் போட்டியிடுகிறது. இதனால் அங்கு மும்முனை போட்டி எழுந்துள்ளது.
தெலுங்குதேசம், பாஜக கூட்டணியுடன், டோலிவுட் நட்சத்திரமான பவன் கல்யாணின் ஜேஎஸ்பி கட்சியும் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டின் வெற்றியை மீண்டும் பெற தெலுங்குதேசம் திட்டமிட்டு உள்ளது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, முத்தரப்புக் கூட்டணியின் முகமாக இருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 151 இடங்களைக் கைப்பற்றி, மகத்தான வெற்றியுடன் டிடிபியிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. அது 49.95 சதவீத வாக்குகளைப் பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்கள் மற்றும் 39.17 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
137 இடங்களில் போட்டியிட்ட ஜனசேனா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பவன் கல்யாண் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். 2019ல் பாஜக தனித்துப் போய் வெற்றி பெறவில்லை. அது வெறும் 0.84 சதவீத வாக்குகளைப் பெற்றது.
இந்த நிலையில், தற்போதைய பாஜக கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பிஜேபி நாயுடுவுடனான தனது கடந்த கால அனுபவத்தைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், பவன் கல்யாண் கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையிலில், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட, பாஜக பிரமுகர், சித்தார் ரெட்டி, தேர்தல் அறிக்கையின் நகலை வாங்க மறுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
என்டிஏ வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘சூப்பர் சிக்ஸ்’ உத்தரவாதங்களை அளித்துள்ளது. அதன் மூலம் வாக்காளர்களை கவர முயற்சிக்கிறது. அதன்படி,
- அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம்,
- ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள்,
- பள்ளி செல்லும் குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.15,000,
- 20 லட்சம் வேலை வாய்ப்பு அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் மாதம் ரூ.3,000,
- ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1,500
- 18 வயதுக்கு மேற்பட்ட பெண், ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 20,000 ரூபாய் நிதியுதவி என இலவசங்களை அறிவித்து மக்களை தன்பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது.