அகமதாபாத்- தேங்கியுள்ள வழக்குகளை முடிப்பதற்கு வழக்கறிஞர் சங்கம் ஒத்துழைத்தால் நீதிபதிகள் சனிக்கிழமைகளிலும் பணிபுரியத தயாராக இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 150 ஆம் ஆண்டு துவக்கவிழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமை வகித்துப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதிபதிகள் வழக்குகளை முடிக்கத் தயாரக இருந்தும்கூட வழக்கறிஞர் சங்கங்கள் சில நேரங்களில் ஒத்துழைக்காததால், நீதிமன்றத்தில் தேங்கிவரும் வழக்குகளின் எண்ணிக்கை மிகுந்த கவலை அளிக்கிறது. வழக்கறிஞர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால்,பழைய வழக்குகளை முடித்து வைப்பதற்காக நீதிபதிகள் சனிக்கிழமைகளிலும் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர். இதனால் பல ஆண்டுகளாக முடித்து வைக்கப்படாத வழக்குகள் பைசல் செய்யப்படும். விசாரணை கைதிகளாகவே பல்லாண்டு காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். அலகாபாத் உயநீதிமன்றத்துக்கு மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு.
இங்கு மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, தேஜ் பகதூர் சாப்ரு, கைலாஷ் நாத் கட்ஜு போன்ற மிகப்பெரிய சட்டமேதைகள் வாதடிய நீதிமன்றம் இது. அவர்களின் புகழ்மிக்க வாதத் திறமையும் சட்டநுணுக்கங்களும் இன்றும் மற்றவர்களால் பின்பற்றத்தக்க வகையில் உள்ளது. நான் குறிப்பிட்ட அந்த அனைத்துச் சட்டமேதைகளும் நான் பிறந்த ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்கு கூடுதல் பெருமை அளிக்கிறது. பழைய சட்டமேதைகளின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லியே நாம் காலம் கழித்துவிடக்கூடாது. அவர்கள் அடைந்த புகழையும் செல்வாக்கையும்விட நாம் கூடுதலாய் போற்றப்படவேண்டும்.
அவர்களைவிட கூடுதலாய் உழைத்து முயற்சி செய்து வழக்கறிஞர்கள் இத்துறையில் சாதிக்கவேண்டும். இன்றைய நவீனகால நீதித்துறை பொதுமக்கள் பார்வையிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் உள்ளேயும் வெளியேயும் என இருதரப்பும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது.. நீதித்துறையில் நம்பகத்தையின் முக்கியத்துவம் மிகவும் அவசியம். நீதிபதிகள் சவால்களை சந்திக்கும் திறன்பெற்றவர்களாக இருக்கவேண்டும். நவீன காலத்திற்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்ளவேண்டும்.நீதிபதிகள் கடமையிலிருந்து விலகாவதவர்களாகவும், காலம் தவறாதவர்களாகவும் விளங்கவேண்டும். நீதித்துறையின் மாண்புகளை நிலைநிறுத்தும் அனைத்தும் முயற்சிகளையும் நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.