சென்னை: உடல் பருமனை குறைக்க சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என கூறியதுடன், சிகிச்சையில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார்.
புதுச்சேரியின் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் மகன் ஹேமசந்திரன் (வயது 26). இவர், பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம் பட்டப்படிப்பை முடித்து விட்டு டிசைனிங் பணியில் இருந்து வருகிறார். இவர் உடல் பருமான இருந்ததால், அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், உடல் பருமன் குறையாத நிலையில், சென்னை வந்து, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதைத்தொடர்ந்த, ஏப்ரல் 22ந்தேதி அன்று காலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை (Liposuction – Fat Removal Surgery) செய்யும் பணி நடைபெற்றது. ஆனால், துரதிருஷ்டவசமாக, அறுவை சிகிச்சை தொடங்கிய சில நிமிடங்களில் ஹேமசந்திரன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவருக்கு மாரடைப்பு (Cardiac Arrest) ஏற்பட்டதால் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உயிரிழந்த ஹேமசந்திரனின் குடும்பத்தினர் அவர் சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை மீது பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவரது புகார் மனுவில், 26 வயதான தனது மகன் ஹேமசந்திரன் 150 கிலோ உடல் பருமனை குறைக்க யூ-ட்யூப் மூலம் ஒரு மருத்துவர் ரெலா மருத்துவமனையில் அணுகி ஆலோசனை செய்துள்ளார் என்றும் இதற்கு சுமார் ரூ. 8 லட்சம் வரை செலவழித்திருப்பதாகவும் கூறினார். மேலும், ஆலோசனை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பம்மலில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமையில் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ரூ.4 லட்சம் செலவாகியது என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் அறிவுறுத்தலை ஏற்ற ஹேமசந்திரனின் குடும்பத்தினர் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டு பம்மலில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு ஹேமசந்திரனை அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் காலை 10.15 மணியளவில் ஹேமசந்திரனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக ரெலா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவரின் தந்தை புகாரில் குறிப்பிட்டுள்ளார். தனது மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவமனை மீதும், ஒரு மருத்துவர் மற்றும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,
குறிப்பாக, தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், மருத்துவரின் உதவியாளர் மற்றும் அந்த தனியார் மருத்துவமனை ஆகிய எதிர்மனுதாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.