ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தலையில் ரத்தம் வடிய ஒருவருக்கொருவர் நாற்காலிகளை தூக்கிஅடித்து மோதிக்கொண்டனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பாஜக அரசு, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற மத்தியஅரசின் விசாரணை அமைப்புகளைக்கொண்டு எதிர்க்கட்சியினரை வேட்டையாடி வருகிறது. அதன்படி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலக்கரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதுபோல டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற நிகழ்வுககளை கண்டித்து, பொதுக்கூட்டம் நடத்தவும், அதில் கலந்துகொள்ளவும் எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தலைவர்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அழைத்திருந்தது. இந்த பொதுக்கூட்டத்துக்கு, ‘உல்குலன் நியாய யாத்திரை’ என்று பெயரிடப்பட்டிருந்தது.
அதன்படி, ராஞ்சியில் நடைபெற்ற ‘உல்குலன் நியாய யாத்திரை’ பொதுக்கூட்டத்தில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா. காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்பட முக்கிய கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேடையில் இருக்கை போடப்பட்டு, அதில் அவர்களின் பெயர்கள் மட்டுமே ஒட்டப்பட்டு இருந்தன. அந்த சேர் காலியாக வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இடையே திடீரென, கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி, அடிதடியில் இறங்கினார். இதனால் தொண்டர்கள் சிலர் காயமடைந்த நிலையில், ஒருவரின் தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. இருந்தால் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திய நிலையில், கட்சி தலைவர்களும், காவல்துறையினரும் அவர்களை சமாதானப்படுத்தினார். இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
ஜார்கண்டின் சத்ரா மக்களவை தேர்தல் வேட்பாளராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கே.என். திரிபாதியை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.