சென்னை: அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள், பணம், பரிசு பொருட்களையும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுக்க சேலைகளை பதுக்கி வைத்திருந்தது தொடர்பான புகாரின் மீது, அவர் ஈரோட்டில் பண்டல் பண்டலாக சேலைகள் மார்ச் 26ந்தேதி அன்று தேர்தல் அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. இது சுமார் ரூ.60 லட்சம் மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.
அதாவது, கவுந்தப்பாடி அருகே உள்ள கல்யாண ஸ்டோரில் சுமார் 100க்கும் மேற்பட்ட பண்டல்களில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது 161 பண்டல்களில் சுமார் 25ஆயிரம் சேலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கல்யாண ஸ்டோரின் உரிமையாளர் ரவிச்சந்திரன் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பண்டல்கள் தனது நண்பர் யுவராஜ் என்பவர் கொடுத்ததாகவும், இது அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்காக இங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனடிப்படையில் பண்டல்களை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் இது தொடர்பாக ஈரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடைப்படையில் வாக்காளர்களுக்கு வழங்க சேலைகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறி ஆற்றல் அசோக்குமார், அவரது நண்பர் யுவராஜா மற்றும் கல்யாண ஸ்டாரின் உரிமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆற்றல் அசோக்குமார் தரப்பில், தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த சேலைகளை திரும்ப தர உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.