சென்னை
நடிகை சோனியா அகர்வால் புதுப்பேட்டை 2 படம் குறித்துப் பேசி உள்ளார்.’
தனுஷுக்கு ஜோடியாக ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சோனியா அகர்வால் ‘கோவில்’, ‘மதுர’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘திருட்டு பயலே’ போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டில் தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவனைத் திருமணம் செய்துகொண்ட சோனியா அகர்வால், 2010-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். சோனியா அகர்வால் தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஒரு புதிய படத்தில் வில்லியாக நடிக்கும் சோனியா அகர்வால்,
“ஒரு புதிய படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறேன். சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன். ஒரு நல்ல நடிகரோ, நடிகையோ புதிய, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. அந்தவகையில் எனக்கும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன்.
‘புதுப்பேட்டை’ படத்தின் 2-ம் பாகம் உருவாகப் போகிறது என இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருந்தது மட்டும்தான் எனக்குத் தெரியும். அதற்கு மேல் இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள்? நான் நடிக்கிறேனா, எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது? போன்ற எந்த விவரமும் எனக்குத் தெரியாது. என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம்”
என்று தெரிவித்துள்ளார்..