சென்னை: அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசியான, விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார். அவருக்கு வயது 71. நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, நேற்று இரவு வரை கட்சிப்பணி ஆற்றி வந்தார். நேற்று இரவு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை அபாயகரமாக இருப்பதாக இன்று காலை தகவல்கள் பரவிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
71 வயதாகும் புகழேந்தி எம்எல்ஏவுக்கு ஏற்கனவே ல்லீரல் பாதிப்பு நோய் இருந்ததாகவும், அதற்கு, சில நாள்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில்தான் வீடு திரும்பினார். நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் பிரசாரக் கூட்டத்திலும் புகழேந்தி கலந்து கொண்டார். நிகழ்ச்சியிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் காலமானாதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதியைச் சேர்ந்த புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர். 1973-ம் ஆண்டு கிளைக் கழகச் செயலாளராக கட்சியில் சேர்ந்த இவர், 1980-86 காலகட்டங்களில் மாவட்டப் பிரதிநிதியாக இருந்தார். 1989-ல் பொன்முடி முதல் முறையாக விழுப்புரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்காக கடுமையாக தேர்தல் பணி செய்தவர். அதற்கு நன்றிக்கடனாக இவருக்கு 1996-ல் கோலியனூர் ஒன்றிய சேர்மன் பதவியையும் 2006-ம் ஆண்டு இவரின் மருமகளுக்கு சேர்மன் பதவியையும் வழங்கி அழகுபார்த்தார் பொன்முடி.