சிவகங்கை: திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்முலும் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை குறித்து கிண்டலாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல, இந்த திட்டத்தை, பெண்களுக்கு போடும் பிச்சை என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பேசியதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில், சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், “திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம், என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொருளாதார யுக்தி. இந்த திட்டத்தை பலர் கொச்சைப் படுத்துகிறார்கள். மேல்தட்டில் இருந்துக் கொண்டு இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் அவர்களுக்கு, ஆயிரம் ரூபாயின் அருமையும், ஏழைகளின் கஷ்டமும் தெரியாது. முக்கியமாக அவர்களுக்கு எந்த பொருளாதாரமும் தெரியாது.
தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவதுபோல, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணத்தால் உள்ளூர் பொருளாதாரம்தான் வளருகிறது. இந்த பணத்தை வைத்து மும்பைக்கு சென்று பங்கு வாங்கவோ, டெல்லி, லண்டன் சென்று செலவு செய்யவோ போவதில்லை. வீட்டைச் சுற்றியுள்ள கடைகளில்தான் செலவாகும். அதனால், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்துவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம்” என்றார்.
நீட் விவகாரத்தில் திமுகவின் பேச்சை விமர்சித்து வரும் கார்த்தி சிதம்பரம், மகளிர் உரிமை தொகை விவகாரத்தில் திமுகவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.