டெல்லி: வாக்குப்பதிவின்போது,  யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்படுகிறது. இந்த இயந்தித்தின்மூலம் கிடைக்கும், எந்த சின்னத்திற்கு வாக்களிக்கப்பட்டது என்ற ரசிதுகளையும் எண்ண வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.

நாடு முழுவதும் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின், அதாவது   EVMs இயந்திரம் பயன்படுத்தப்பட்ட வருகிறது.  இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது வாக்காளர்களுக்கு தெரியாது. இதனால்,அதை உறுதிப்படுத்தும் வகையில்,  விவிபாட் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரம் செயல்படுத்தப்பட்டது.  ஆனால், இந்த இயந்திரம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. முக்கிய வாக்குச்சாவடிகளில் மட்டுமே வைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாக்காளர் எந்த சின்னத்துக்கு வாக்களித்தார் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளலாம்.

இந்த இயந்திரத்தை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், இதற்கு செலவு அதிகமாகும் என்பதால், அதை  மத்தியஅரசும், தேர்தல் ஆணையமும் முழுமையாக செயல்படுத்தாமல் தாமததித்து வருகிறது.

அதே வேளையில்,  இந்திய தேர்தல் ஆணையம்,  இவிஎம் இயந்திரம் 100% நம்பகத்தன்மை கொண்டது. அதனால், விவபாட் ரசீதுகள்  எண்ணப்பட வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் பி.ஆர். கோவாய் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இது தொடர்பாக  கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்,  “இது தொடர்பாக இந்தியா கூட்டணி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்த நேரம் கேட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் றுப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது முக்கியமான முதல்படி. தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.