a
தமிழகத்தில் மீண்டும் ஒரு கவுரவக் கொலை  நடந்திருக்கிறது..
பட்டப்பகலில் கொலை செய்து விட்டு, சாவகாசமாக செல்கின்றனர். பெற்ற மகளாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனை திருமணம் செய்த காரணத்துக்காக அவளையும் வெட்டிக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். அவள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்.
கணவன் இறந்து விட்டான். பெற்றோரே கொலை செய்ய முயற்சி செய்துள்ளதால், இனி அவர்களோடும் வாழ முடியாது. சாதி வெறியின் காரணமாக ஆதரவின்றி தெருவில் நிற்கிறாள் அந்தப் பெண்.
தலித்துகளுக்கு எதிரான இந்த சாதி வெறியை இடது சாரிகள் தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கண்டும் காணாமலும் இருந்தே வந்திருக்கின்றன என்றாலும், இந்த சாதி வெறியை கூர்மை தீட்டி வளர்த்து விட்டது பாட்டாளி மக்கள் கட்சியே.
இளவரசன் மற்றும் திவ்யா திருமணத்துக்கு பின்னால் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து வெளிப்படையாகவே தலித்துகளுக்கு எதிரான அனைத்து ஆதிக்க சாதி கூட்டமைப்பை ஏற்படுத்தினார் மருத்துவர் ராமதாஸ். ஒவ்வொரு மாவட்டமாக சென்று, தலித்துகளுக்கு எதிராக அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்தார். எந்த சாதியில் திருமணம் செய்தாலும் பரவாயில்லை, தலித்தை மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நினைக்கும் அனைத்து சாதியினர் மத்தியிலும் அவருக்கு ஆதரவு கிடைத்தது.
இன்று வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசும் பாமக, வெளிப்படையான தலித் எதிர்ப்பு கொள்கையை பிரகடனப்படுத்தியது. ஜீன்ஸும், கூலிங் கிளாஸும் போட்டுக் கொண்டு தலித் இளைஞர்கள் பிற சாதிப் பெண்களை கவர்வதையே வேலையாக வைத்திருக்கிறார்கள் என்று அப்பட்டமாக குற்றம் சுமத்தினார் ராமதாஸ். இந்த அனைத்து சாதிக் கூட்டமைப்பு தலித் அல்லாதோருக்கான கூட்டமைப்பு என்றே அறிவித்தார்.
ராமதாஸ் போன்ற முக்கிய தலைவர்களே இப்படி வெளிப்படையாக அறிவிக்கையில், சாதி உணர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பல்வேறு இயக்கங்களின் நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
வெறும் சாதியக் கூட்டமைப்பு மட்டுமே தேர்தலில் வெற்றி தராது என்பதை உணர்ந்த ராமதாஸ் தற்போது, மாற்றம், வளர்ச்சி என்று பேசி வருகிறார். தற்போது அவர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டாலும், இரண்டாண்டுகளுக்கு முன்னால் அவர் விதைத்த விஷ விதை, ஆரோக்கியமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதையே இந்தப் படுகொலை உணர்த்துகிறது.
சாதி உணர்வுக்காக பெற்ற மகளையே கொல்லும் அளவுக்கு ரத்தத்தில் சாதி வெறி ஊறிப் போன ஒரு சமுதாயத்தின் இடையேதான் நாம் 2016லிரும் வாழ்கிறோம் என்ற யதார்த்தம் விரக்தியையே ஏற்படுத்துகிறது.
– ஏ. சங்கர் (முகநூல் பதிவு)