சென்னை: இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகளை வீசக்கூடாது என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த தகவலை நீதிமன்றத்தில் அரசு தெரிவித்து உள்ளது.
இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது, சாலைகளின் இருபுறமும் மாலைகள், பூக்கள் வீசப்படுவது சென்னை போன்ற நகரங்களில் வாடிக்கையாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடுகள் மட்டுமின்றி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதையடுத்து, இறுதி ஊர்வலத்தின் போது மாலைகளை சாலைகளில் வீசினால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அனைத்து காவல்நிலையத்துக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 2022 செப்டம்பர் 4ம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், பண்ருட்டியில் நடைபெற்ற ஒருவரின் இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் வீசப்பட்ட மாலைகளில் பைக்கை ஏற்றி வழுக்கி விழுந்து ஒருவர் பலியாகி விட்டார். அதனால், இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிப்பது குறித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கடிதத்தை மனுவாக ஏற்று, தாமாக முன்வந்து வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், இதுதொடர்பாக, டிஜிபி சங்கர் 2024ம் ஆண்டு மார்ச் 20ந்தேதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அனைத்து போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறி அந்த சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த சுற்றறிக்கையில், இறுதி ஊர்வலம் என்பது மக்களின் கலாசாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம். அதேநேரத்தில், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,
இறந்தவரின் உறவினர்கள், இறுதி ஊர்வலம் எப்போது? எந்த வழியாக செல்லும் என்பதை முன்கூட்டியே காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஊர்வலம் செல்லும் வழியில் போக்குவரத்து சரி செய்து கொடுக்கப்படும்.
இறுதி ஊர்வலத்தின்போது, அதிக அளவில் மாலைகள், மலர்வலையங்களை சாலைகளில் வீசக்கூடாது.
அதை மீறி சாலைகளில் வீசப்பட்டால், உள்ளூர் போலீசார், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முறையான அனுமதியில்லாமல், மரண அறிவிப்பு விளம்பர பலகை, பேனர்கள் வைக்கக்கூடாது.
நெடுஞ்சாலை, பிரதான சாலைகள், உயர்மட்ட பாலங்களில் இறுதி ஊர்வலத்தை நடத்துவதை உறவினர்கள் தவிர்க்கவேண்டும்.
போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த நிபந்தனைகளை யாரும் மீறக்கூடாது.
மீறினால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதிகள், டி.ஜி.பி. சுற்றறிக்கை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று நம்புவதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.