சென்னை: நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல்ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.
தமிழகம்-புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறத. அதன்படி தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 19ந்தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நாளை ( மார்ச் 27-ந் தேதி) உடன் முடிவடைகிறது. அதையடுத்து மார்ச் 28ந்தேதி வேட்பு மனு மீதான பரிசீலனையும், மார்ச் 30ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சாகு, தமிழ்நாட்டில், தேர்தல் நடத்தை விதிகளை சிறப்பாக அமல்படுத்தி வருகிறோம். அதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது என்றார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றவர், பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுப்பதில் தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தவர், வாக்குப்பதிவு தினத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.