சென்னை: வட சென்னை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவின் ஜெயக்குமார் ஆகியோர் நேருக்கு நேராக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கார் தாக்கப்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 25ந்தேதி) பவுர்ணமி தினம் என்பதால், பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அதற்கான அலுவலகத்தில் குவிந்தனர். இந்த விஷயத்தில் ஆளும் கட்சி தரப்பு விதிகளை மீறி செயல்பட்டதால், பல இடங்களில் வாக்குவாதம் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் பாஜகவினர் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், காவல்துறை அதிகாரி மன்னிப்பு கோரினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையில், வடசென்னையில் வேட்புமனுத் தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபுவுக்கும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக கலாநிதி வீராச்சாமி, அதிமுகவில் ராயபுரம் மனோ ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கலுக்கு முதலாவதாக வந்து டோக்கன் பெற்ற நிலையில், அதன்பிறகு வந்த திமுக, தாங்கள்தான் முதலில் வேட்புமனுத் தாக்கல் செய்வோம் என்று தகராறில் ஈடுபட்டனர்.
தேர்தல் அதிகாரி முன்பே திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் சேகர்பாபு தர்க்கம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அமைச்சருக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், தேர்தல் அதிகாரி முன்னிலையிலேயே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
முன்னதாக அதிமுக முன்பே சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளர் பெயரில் டோக்கன் வாங்கியது. அக்கட்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் 7ம் நம்பர் டோக்கன் கொடுத்திருந்தார். திமுகவுக்கு இரண்டாவது டோக்கன் கொடுத்திருந்தாலும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பெயரில் அந்த டோக்கன் வாங்கப்பட்டிருந்தது. இதனால், தேர்தல் நடத்தும் அலுவலர் முதலில் அதிமுகவின் வேட்புமனு தான் வாங்கப்படும் என தெரிவித்தார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் வேட்பாளர் கலாநிதி வீராச்சாமி ஆகியோர் 2ம் நம்பர் டோக்கன் திமுகவுக்கு கொடுத்திருப்பதால் தங்கள் வேட்புமனுவை முதலில் வாங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரவித்தனர். உடனே அமைச்சர் சேகர்பாபு ஆவேசமடைந்து ஜெயக்குமாரிடம் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்தார். இதனால் அந்த இடமே பரபரப்பானது.
அப்போது, திடீரென பாஜக வேட்பாளர் பால் கனகராஜூம் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் இன்னும் அந்த இடத்தில் பரபரப்பு கூடியது. இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர், முதலில் வந்த அதிமுகவின் வேட்புமனு மட்டுமே வாங்கப்படும், இரண்டாவதாக வந்த திமுக வேட்பாளர் கலாநிதி வீராச்சாமி மனு அதன்பிறகே வாங்கப்படும் என உறுதியாக தெரிவித்துவிட்டார். ஆனால், அதனை ஏற்க மறுத்து அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதம் செய்தார். இதனால் 2 மணி நேரங்களுக்கு மேலாக அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதன்பின் வருகைப் பதிவேடு பரிசோதிக்கப்பட்டது. அதன்படி அதிமுகவின் ராயபுரம் மனோ தரப்பு முதலில் வந்தது உறுதிசெய்யப்பட்டது. அவரையே முதலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தார். அதுவரை, அமைச்சர் சேகர்பாபு, கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா ஆகியோர் தனி அறையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின்போது இருதரப்பிலும் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு கடுமையான சொற்களால் வசைபாடிக் கொண்டனர். வெட்புமனு தாக்கலுக்குப் பிறகு இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி ‘அவர்கள் மீதுதான் தவறு” என்று விவரித்தனர். இதனிடையே, அலுவலகத்துக்கு வெளியே தொண்டர்கள் கூடியதாலும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தால், அதிமுகவினர் இப்படிப்பட்ட அராஜகங்களை கட்டவிழ்த்து விடுவார்கள். எதிரிகள் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே, தேர்தலை அமைதியாக சந்திக்க வேண்டும். எங்கும் ஒரு சிறு சலசலப்புக்கு இடமளிக்கக் கூடாது என்ற தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ற வகையில், அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டோம்” என்றார்.
அதேவேளையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது “திமுகவினர் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், முண்டியடித்துக்கொண்டு மரபைப் பின்பற்றாமல், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த இருக்கைகளைப் பிடித்துக் கொண்டனர். ஆளுங்கட்சி தங்களது அதிகாரத்தை முழுமையாக துஷ் பிரயோகம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அழுத்தம் கொடுத்து அவரை பணிய வைக்கப் பார்த்தனர்” என்றார்.