சென்னை: சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கும் பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், அவர் மீண்டும் எம்எல்ஏக பொறுப்பேற்றார். இதையடுத்து, அவரை அமைச்சராக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் அதை ஏற்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சனம் செய்தது.
இதையடுத்து, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் ஒப்படைக்கப்பட்ட உயர்கல்வித்துறை மீண்டும் பொன்முடிக்கு வழங்கப்படுகிறது; பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் அந்த துறையிலேயே நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.