டில்லி
தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் மீது டில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 9ஆம் தேதி அன்று தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, பிரதமர் மோடியைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ வைரல் ஆகி உள்ளது.
பா.ஜனதா தலைவர்கள் பலர் இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
டில்லியில் வசிக்கும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்யா ரஞ்சன் ஸ்வைன், இந்த சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டில்லி நாடாளுமன்றம் தெரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நேற்று அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் மீது டில்லி காவல்துறையினரால் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.