சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடுக, விருப்பமனு பெறுதல் என பரபரப்பாக சுழன்று வரும் நிலையில், பெயரே இல்லாமல் தனது தீவிர ஆதரவாளர் சிலரை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வரும் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைத்துள்ளதுடன், விருப்ப மனு பெறுதல் மற்றும் நேர் காணல் தொடர்பாகவும் அறிவித்து உள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அரசியல் அனாதையாக உள்ள ஓபிஎஸ் அணியினர், தங்களது அணிக்கு எந்தவொரு பெயரும் வைக்காத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, தர்மர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓபிஎஸ் அணி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் விரும்பும் நபர்கள், நாளை அக்கட்சி சார்பில் வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என்றும், விருப்ப மனு வழங்குபவர்களுக்கு நாளை மாலையே நேர்காணல் நடைபெறும் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தலைமையில் இந்த நேர்காணல் நடைபெறும் என்றும் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, தர்மர் ஆகியோரும் இந்த நேர்காணலில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.