கர்நாடக மாநிலத்தில் 4 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் மக்கான், சையத் நசீர் ஹுசைன் மற்றும் ஜிசி சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டனர், பாஜக சார்பில் நாராயண ஸ் பன்டகே-வும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் குபேந்திர ரெட்டி-யும் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தலா 47 வாக்குகள் பெற்று மூவரும் வெற்றிபெறுவார்கள் என்று அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்திருந்தார்.

223 சட்டமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 134 உறுப்பினர்கள் உள்ள நிலையில் இது சாத்தியமில்லை என்றும் பாஜக உறுப்பினர்களின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றிபெறும் என்றும் பாஜக-வினர் கூறிவந்தனர்.

பாஜக-வுக்கு 66 உறுப்பினர்களும் ம.ஜ.த.-வுக்கு 19 உறுப்பினர்களும் உதிரி கட்சிகள் சுயேட்சை என மொத்தம் 4 பேர் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது வேட்பாளர் தேர்வாவதில் சிக்கல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று நடைபெற்ற தேர்தலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரபில் ஷிவ்ராம் ஹெப்பார் வாக்களிக்கவில்லை, தவிர மற்றொரு பாஜக எம்.எல்.ஏ. எஸ்.டி. சோமசேகர் கட்சி மாறி வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் 47 வாக்குகளும் சையத் நசீர் ஹுசைன் 46 வாக்குகளும் மற்றும் ஜிசி சந்திரசேகர் 46 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக வேட்பாளர் நாராயண ஸ் பன்டகே 48 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ம.ஜ.த. சார்பில் போட்டியிட்ட குபேந்திர ரெட்டி 35 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

மாநிலங்களவை தேர்தலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பது அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.