சென்னை: இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய 7 அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.. 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதன்மறையாக இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் 7 முக்கிய அம்சங்கள் :
சமூக நீதி,
கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு,
உலகை வெல்லும் இளைய தமிழகம்,
நீ அறிவுசார் பொருளாதாரம்,
சமத்துவ நோக்கில் மகளிர் நலம்,
பசுமைவழிப் பயணம்,
தாய் தமிழும், தமிழர் பண்பாடும்