சென்னை: திருச்சி துவாக்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சுவாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 23ந்தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாழவந்தான் கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியானது சுமார் 13 வருடங்களுக்கு மேலாக சுங்கக் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலையின் தொடக்கத்திலேயே, துவாக்குடியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது.

மத்திய அரசு விதிகளின்படி அருகருகே 2 சுங்கச் சாவடி அமைக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 2021-ம் ஆண்டு அன்று முன்னாள் எம்.பி. குமார் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை மந்திரிக்கு கடிதம் எழுதினார். தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தோம். இந்த நிலையில், தற்போது சுங்கச்சாவடி பணிகள் முடிவுற்று தற்போது சோதனை முறையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய நிர்வாகத்தையும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத தி.மு.க. அரசையும் கண்டித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில், 23-ந்தேதி மாலை 5 மணிக்கு, துவாக்குடி பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையிலும் நடைபெறும். இதில், அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு  கூறியுள்ளார்.