சென்னை: வார இறுதி நாட்களில் பக்தர்கள் நவக்கிரக ஸ்தலங்களுக்கு சிரமமின்றி செல்லும் வகையில்,  கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளதாக அமைச்சா் சிவசங்கா்  தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் 24ந்தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கும்பகோணம் பகுதியில்  அமைந்துள்ள நவக்கிரக ஸ்தலங்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர்.  ஆனால், அவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் பேருந்துகள் மாறி மாறி செல்வதால் கால தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், சிறப்பு பேருந்து வசதிகள் செய்து தருமாறு தமிழ்நாடு அரசுக்கு பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  நவக்கிரக தலங்களுக்கு செல்ல பிப்.24 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரே பேருந்தில் புறப்பட்டு நவகிரக தலங்களுக்கும் சென்று விட்டு மீண்டும் பேருந்து நிலையம் வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்து பிப்.24 முதல் இயக்கப்படவுள்ளது.

இப்பேருந்து சேவை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் மட்டும் கும்பகோணம் கோட்டம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பயணத்தை மேற்கொள்ள பயணக் கட்டணமாக நபா் ஒருவருக்கு ரூ.750 வீதம் வசூலிக்கப்படும்.

முன்பதிவு செய்த பயணிகளுடன் கும்பகோணத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்து, முதலில் திங்களூா் சந்திரன் கோயிலில் தரிசனத்துக்காக நிறுத்தப்படும்.

பின்னா், ஆலங்குடி சென்று காலை 7.15 மணிக்கு அங்கு குரு பகவான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். 9 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு பகவான் தரிசனத்துக்கும் ,10 மணிக்கு சூரியனாா் கோயிலுக்கும் அழைத்துச் செல்லப்படுவா்.

முற்பகல் 11 மணிக்கு கஞ்சனூா் சுக்கிரன் கோயில் தரிசனத்துக்கும், 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலில் செவ்வாய் கிரக தரிசனத்துக்கும் அழைத்து செல்லப்படுவா்.

பிற்பகல் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை விடப்படும்.

மதியம் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோயில் தரிசனத்துக்கும் ,

மாலை 4 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனத்துக்கும்,

4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் தரிசனத்துக்கும் அழைத்து செல்லப்படுவா்.

தொடா்ந்து, மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை பேருந்து வந்தடையும் வகையில் இயக்கப்படவுள்ளது.

இப்பயணத்தை மேற்கொள்ள விரும்புபவா்கள் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.