உச்சநீதிமன்றம்
புதுடெல்லி –
தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்,பதவி உயர்வின்போது இடஒதுக்கீட்டை உரிமையாகக கோரமுடியாது என இந்திய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டப்படி பதவி உயர்வின்போது மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்களுக்கு முனுரிமை அளிக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்றும் கூறியுள்ளது.
அரசுப்பதவிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வின்போதும் இட ஒதுக்கீட்டைப்பின்பற்றுமாறு உ.பி.மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி பொது நலவழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதனை உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 12) விசாரித்தது.
அம்மனுவவை நீதிபதிகள் திபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்லா சி. பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தனர். அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:
அரசுப்பணிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு பதவி உயர்வின்போது இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் எந்த அரசமைப்புச் சட்டமும் வலியுறுத்தவில்லை. எனவே அரசுப்பணிகளின் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் சலுகை காட்டவேண்டிய அவசியமில்லை. மேலும் இவ்வாறு பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உத்தரவிடமுடியாது.
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 16(4) , 16 (4 A), 16 ( 4 B ) போன்றவை , அரசுப்பணிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு பதவி உயர்வின்போது இட ஒதுக்கீட்டைபின்பற்ற வேண்டும் என வலியுறுத்தவில்லை.
அரசமைப்பு சட்டப்பிரிவு 16 (4 A)படி எந்த அரசுப் பதவியில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் மாநில அரசுகள் சலுகை அளித்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை.
உத்தரபிரதேச மாநில அரசு பதவி உயர்வின் போது தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகை காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது அவர்களின் வேலையும் அல்ல.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு அமல்படுத்துவதற்கான கொள்கைகளை வகுப்பது என்பது மாநில அரசின் சிறப்புரிமை. இதனைச் செய்யுமாறு உ.பி.மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது எனக்கூறி அந்த மனுவினை தள்ளுபடி செய்தனர்.