டெல்லி : டெல்லி மாநிலத்தில் ஆளும் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், எம்எல்ஏக்கள் பேரம் தொடர்பாக கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மாநில முதல்வருக்கே மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ஆம்ஆத்மி அரசுமீது, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர், எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால், அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.
இதற்கிடையில் டெல்லி ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறது. மேலம், கடந்த வாரம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.-க்களிடம் பா.ஜனதா பேரம் பேசியது. ஒரு எம்.எல்.ஏ.-வுக்கு தலா 25 கோடி ரூபாய் என ஏழு எம்.எல்.ஏ.-க்களிடம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை டெல்லி மாநில பா.ஜனதாவினர் மறுத்து வந்தனர். மேலும், யார் பேரம் பேசியது என்பத தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும், பாஜக மீது கெஜ்ரிவாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறி வருவதாகவும், அவர்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா கட்சி தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான உயர்மட்டக்குழு டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்தது.
இந்த புகாரின் பேரில், டெல்லி போலீசின் குற்றப்பிரிவு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில காவல்துறை அம்மாநில முதல்வருக்கே நோட்டீஸ் அனுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.