சென்னை: சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வரும் 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக இரண்டு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூரை இணைக்கும் அஜந்தா மேம்பாலம் இடிக்கும் பணி தொடங்கி உள்ளது.
மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட பணிகளுக்காக சென்னை அஜந்தா மேம்பாலம் இடிப்பு ராயப்பேட்டையில் அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி நடைபெறுகிறது மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மயிலாப்பூர், மந்தவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை – 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும்.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும். இந்த கட்டுமானம் காரணமாக சென்னையில் பல்வேறு பாலங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக மயிலாப்பூரில் பாலம் ஒன்று இடிக்கப்பட உள்ளது., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) திருமயிலை எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில் அமைந்துள்ள கல்வெர்ட் பாலத்தை இடிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கப்பாதை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதால் இந்த பாலம் இடிக்கப்பட உள்ளது. மந்தவெளி அல்லது கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து லஸ் சந்திப்புக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பதிலாக புதிய பாலம் அருகில் கட்டப்பட்டு அதன் மூலம் வாகன போக்குவரத்து மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்மொழியப்பட்ட திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம், இரண்டு வழித்தடங்களை இணைக்கும் ஒரு மெட்ரோவாக அமைய உள்ளது. இங்கே 35 மீ ஆழத்தில் ஆழமான சுரங்கங்களை அமைக்க உள்ளனர் .. திருமயிலை மற்றும் அது இணைக்கும் மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் 2028 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக திறக்கப்படும். திருமயிலை நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகள் கட்டுவதன் காரணமாக இங்கே உள்ள பாலம் இடிக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை மெட்ரோவிற்கு சென்னை மாநகராட்சி அளித்துள்ளதால் விரைவில் பாலம் இடிப்பு பணிகள் நடக்க உள்ளன.
அதேபோல் அடையார் சாலையில் உள்ள பாலத்திலும் ஒரு கை உடைக்கப்பட்டு உள்ளது. வலது பக்கம் திரும்பும் கை இடிக்கப்பட உள்ளது. அந்த பாலம் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தற்காலிகமாக பாலத்தை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், அடையாறில் உள்ள எல்பி சாலையை அடையும் வாகன ஓட்டிகள், இரும்பு பாலத்தை கடக்க வேண்டிய நிலை உள்ளது .
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதன் 118.9 கிமீ கட்டம்-2 திட்டத்தின் ஒரு பகுதியாக அடையாறு சிக்னல் அருகே இரட்டை சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி அடையார் சந்திப்பு மெட்ரோ நிலையத்தை 2026 க்குள் கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடையாரை பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூருடன் இணைக்கும் மேம்பாலத்தின் ஒரு கை இடிக்கப்படும் என்றும், இரட்டை சுரங்கப்பாதையாக அஸ்திவார தூண்கள் அகற்றப்படும் என்றும் சிஎம்ஆர்எல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.