சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நெஞ்சுவலிப்பதாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 6 மாதமாக சிறையில் இருந்து வருகிறார். அவரது அமைச்சர் பதவியை பறிக்காமல் தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது.
இதற்கிடையில்,. சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரின் நீதிமன்ற காவலை 16வது முறையாக வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், வங்கிக் கணக்கில் இருந்த உண்மை தொகைகளை திருத்தி, பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வங்கி பணப் பரிவர்த்தனைகளையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாகவும், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் (Pen drive) இருந்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை அமலாக்கத்துறை கணக்கில் கொள்ளவில்லை எனவும், ஆவணத்தில் உள்ள தேதிகளை விசாரணைக்கு ஏற்ற வகையில் அமலாக்கத்துறை மாற்றி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளதுடன், வழக்கில் ஆவணங்கள் மாற்றியமைக்கப் பட்டது விசாரணையில் தான் தெரியவரும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என்றும், ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாக கருதவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு அனைத்து நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் 2வது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.