சென்னை: குடியரசு தினமான ஜனவரி 26ந்தேதி அன்று மாநிலம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக, ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் போன்றவற்றை மேம்படுத்ததேவ கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜனவரி 26ந்தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று 26.01.2024 காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
26.01.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது: கிராம சபை கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும். அத்துடன் கிராம சபை கூட்டத்துக்கான செலவின வரம்பை ரூ.5,000ஆக உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.