சென்னை: 2024 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 20ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளர் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று மெரினாவில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டை எதிர்கொள்ள ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அதுபோல பிரபலமான விடுதிகளும் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாடத்தின்போது சென்னை மாநகரில் வருகிற 31-ந் தேதி அன்று இரவு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை வெளியிட்டு உள்ளது. வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடற்கரை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள். குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உள்ள போலீசார் சென்னை மாநகர் முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபடுகிறார்கள்.
கிழக்கு கடற்கரை சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர். இதற்காக 20 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மணலிலும், கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் பெண்களிடம் சில்மிஷம் போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் டிரோன் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், தடுப்பு வேலிகளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.
இந்த புறக்காவல் நிலையங்களில் பெண் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்களை தடுப்பதற்கு அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 50 இடங்களில் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்துகள் நடைபெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து விபத்துகளை கட்டுப்படுத்தவும் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.
மெரினா உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்காணிக்கும் வகையில் டிரோன் பாதுகாப்பிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.
மெரினாவில் சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக கைகளில் ‘அடையாள வளையம்’ கட்டிவிடப்படுகிறது. இதில் பெற்றோர்களின் செல்போன் எண் மற்றும் போலீஸ் உதவியை நாடும் செல்போன் எண்கள் ஆகியவை இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் மாயமாகும் சிறுமிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதனால் மெரினாவில் காணாமல் போகும் குழந்தைகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவார்கள்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.