கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 35

பா. தேவிமயில் குமார்

 

எங்கிருந்து வந்தாய்

நுகத்தடியில் நகரும்
நரக உழல்வு
நாளும் நாளும் நகர்கிறது,

செந்தீயின் அழகு
சி(ற)வப்பாக இருப்பதும்,
கல்யாண சந்தையில்
கருப்பு ஒதுக்கபடுவதும்
வழக்கமான ஒன்றானது,

அவனின் உயரத்துக்கு
அடங்கிய அவளின்
உருவம் மட்டுமே
ஒப்பீடாக கொண்ட
உலகமெங்குமான குறும்பார்வை,

ஆடவும், பாடவும்
அரங்கத்தில் இல்லாது, அவனின்
அந்தரங்கத்திற்கு
மட்டுமென,
மட்டமான மன ஓட்டம்,

தவறும் தண்டனையும்
சமனென அறிவித்த
ஹமுராபி… ஏன்
அவனும், அவளும்
சமமென சொல்லவில்லை?

அவனுக்கு பிடித்த
இல்வாழ்க்கையை
கண்டிப்பாக
பிடித்தது போல
படித்து ஒப்பிக்க
வேண்டுமென்ற
விதிமுறை …..
கட்டாய கட்டளைகள்,

உப்பின் பயன்பாடு
ஓரளவு குறைந்து,
விழி நீரின் தெளிப்பால்
உணவு சுவை மாறியதை கண்டும்
காணாமல் செல்லும்
காட்டு மிராண்டி கூட்டம்,

ஏவாள்களுக்கு தெரியாத
இன்னொரு குகையில்
அவனின் சல்லாப
இன்னொரு முகம்…
தெரிந்தால் மட்டுமென்ன?
அவன் ஆம்பளை….
என்ற எகத்தாள பதில்,

எங்கிருந்து வந்தாய்
இறைவனே?
இப்படியான படைப்பை யாரும்
உன்னிடம் வேண்டாதபோது
வரமெதற்கு தந்தாய்?
வருந்தும் உணர்வை
உணராத நீ?
உண்மையில் இருக்கிறாயா?