bangladesh
டாக்கா
பங்களாதேசின் அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம் என்பதை நீக்கினால் நாட்டில்  கடும்  போராட்டங்கள் வெடிக்கும்  என அங்குள்ள இஸ்லாமிய மதவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.
பங்களாதேஷ் அரசமைப்பின்படி அந்நாடு மதச்சார்பற்றது. என்றாலும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாமே கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வருகிறது. 90 சதவீதம் இஸ்லாமியர்களைக் கொண்ட பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் முக்கிய சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர்.
நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக  இஸ்லாம் இருப்பதால் மற்ற மதத்தினர் பாரபட்சமாகாவும், பாகுபாட்டுடனும் நடத்தப்படுகின்றனர். மேலும் பழமைவாத இஸ்லாமிய அமைப்புகள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே நாட்டின் அதிகாரப்பூர்வமாக உள்ள இஸ்லாம் மதத்தை நீக்க வேண்டும் எனக் கோரி  மதசார்பற்ற அமைப்பினர் சிலர் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளனர். இந்த மனு வரும் மார்ச் 27 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்த மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும் எனவும் அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.
“ நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக  உள்ள இஸ்லாம்மை நீக்கினால் அதற்கு எதிராக இஸ்லாமிய அரசியல் கட்சிகள், பொதுமக்கள், இஸ்லாமிய மதகுருமார்கள் ஆய்யோர் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். அரசும் நீதிமன்றமும் இஸ்லாமுக்கு எதிராக சதிசெய்து இஸ்லாமியருக்கு தலைகுனிவை ஏற்படுத்தினால் அனைத்து இஸ்லாமியர்களும் வீதிக்கு வந்து போராட வேண்டும். நாடு முழுவதும் நம் எதிர்ப்புத் தீ கொழுந்து விட்டு எரிய வேண்டும்” என ஹெபாஜாத்-இ- இஸ்லாம் என்ற அமைப்பு  கடந்த வாரம், வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
அனைத்துலக அளவில், இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாக பின்பற்றும் நாடுகளில் பங்களாதேஷ்-ம் ஒன்று. இந்நிலையில், அந்நாட்டில் சமீபகாலமாக, இந்து,கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தீவிர முஸ்லிம் அமைப்புகள் இத்தகைய தாக்குதலை, சிறுபான்மையினர் மீது நடத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிகாரப்பூர்வ மதம் என்ற பட்டியலில் இருந்து, இஸ்லாத்தை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், சிறுபான்மையினர் அனைவரும் இஸ்லாமியர்களாகக் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படலாம். இங்கு முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தினர் இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவதாக நடுநிலையாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
கடுமையான விடுதலைப் போராட்டங்களுக்குப் பிறகு 1971 இல்  பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்து அதிகாரப்பூர்வ மதசார்பற்ற தனிநாடாக உருவானது.
1988 இல் அங்கு நடைபெற்ற ராணுவ ஆட்சியின்போது  அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்காக ராணுவ ஆட்சியாளர்களால் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் அறிவிக்கப்பட்டது.
ராணுவ ஆட்சியிலிருந்து விடுபட்டபின் அந்நாட்டின் பிரதமரான ஷேக் ஹசினா பங்களாதேஷ்,  அரசமைப்பு சட்ட்த்தின் தூணாக விளங்கும் மதசார்பின்மையை அங்கு மீண்டும் நிலைநிறுத்தினார். ஆனால் அதேவேளை எந்தவொரு மதத்தின் முக்கிய கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக எவ்விதச் சட்டமும் கொண்டு வரப்படாமாட்டாது என்றும்  அவர் உறுதி அளித்திருந்தார்.