சென்னை: கொரோனா தொற்றுக்கு பிறகு, அதிக அளவில் இளைஞர்கள் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இது சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து பல நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  `கொரோனா நோய்த் தொற்றின்  அலைகளைத் தடுப்பதில் அரசு மற்றும் விஞ்ஞானிகள்  தீவிர கவனம் செலுத்தியதால் இதர நோய்களை கண்காணிக்கும் பணிகள் குறைந்துவிட்டதால், இதயநோய் மரணங்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளது என மருத்துவத்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனா  பெருந்தொற்றுக்கு பிறகு,  இளம் வயதினர் மரணம் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக 18-45 வயதினரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதாகவும், பல இளைஞர்கள்  திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த ஆராய்ச்சியில்,  தமிழகத்தில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, கோவை கேஎம்சிஎச், கோவை பிஎஸ்ஜிமருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கழகம்,மதுரை மருத்துவக் கல்லூரி, சென்னைராமச்சந்திரா ஆராய்ச்சி நிறுவனம்,மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளை சேர்ந்த மூத்த மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர்  12 பக்க ஆய்வறிக்கையை த வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 47 பெரிய மருத்துவமனைகளில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. 729 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 2,916 பேரிடம் தகவல்கள் கேட்டறியப்பட்டன.

கடந்த 2021 அக்டோபர் முதல் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 18-45வயதினரில் திடீரென உயிரிழந்த 29,171 பேரின் மருத்துவ அறிக்கைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வுப்படி, இளைஞர்களின் திடீர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி எந்த வகையிலும் காரணம் கிடையாது.

2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இடையே உயிரிழப்பு குறைவாகவே உள்ளது.

ஒரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரிவினரில் உயிரிழப்பு சற்று அதிகமாக இருக்கிறது.

இளம் வயது உயிரிழப்புகளில் 10 சதவீதம் பேரின் உயிரிழப்புக்கு குடும்ப பின்னணி முக்கிய காரணமாக உள்ளது.

27 சதவீத உயிரிழப்புக்கு புகையிலை, போதை பொருள் பழக்கமும்,

27 சதவீத உயிரிழப்புக்கு மது பழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பலர் இளம் வயதில் உயிரிழந்துள்ளனர். இவை தவிர உணவு பழக்கம், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆகியவையும் இளம் வயது மரணத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

உயிரிழப்பதற்கு 24 அல்லது 48 மணிநேரம் முன்பு அவர்கள் அதிக அளவில்மது அருந்தியிருக்க வேண்டும். அல்லது அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

சிலரது வாழ்க்கை முறை, குடும்ப உடல்நல வரலாறு ஆகியவையே திடீர்உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.