சென்னை: தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பேயே, தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் அரசியல் பிரிவு நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. 1919 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசினால் சட்ட வடிவம் கொடுக்கப்பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இரட்டை ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. இம்முறையின் கீழ் மாநிலங்களுக்குப் பொறுப்பாட்சி வழங்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ் இம்முறையை ஆதரிக்காவிடினும், நீதிக் கட்சி அதனை ஆதரித்தது. இம்முறை மூலம் வைதீக ஆதிக்கத்தை உடைத்து மக்களாட்சியை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை உண்டானது. 1920 இல், மற்றும் 1923 இல் நடைபெற்ற தேர்தல்களில் வென்று நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தது.
திராவிடரின் நலன், பொதுத் துறைகளில் இனவாரிப் பணி ஒதுக்கீடு, கல்வி விரிவாக்கம் போன்ற பல திட்டங்களின் அடிப்படையில் நீதிக்கட்சி செயல்பட்டது. இதனிடையே கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 1926 இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. 1927 இல் மாநிலத் தன்னாட்சிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
1930 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்ததுடன் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் வென்று 1937 ஆம் ஆண்டுவரை நீதிக்கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. எனினும், 1926 ஆம் ஆண்டு முதலே நீதிக்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தே வந்தது. 1937 ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த நீதிக்கட்சி முழுவதும்சிதையத் தொடங்கியது. 1937 க்குப் பின்னர் தலைமைப் பதவியைப் பெரியாரென அழைக்கப்பட்ட ஈ. வெ. ராமசாமி ஏற்றுக்கொண்டார். திராவிட இனக் கொள்கையில் பிடிப்புக் கொண்டிருந்த இவர், தனது தன்மான இயக்கத்தின் மூலம் புகழ் பெற்றிருந்தார். இதனால், நீதிக் கட்சியின் வீழ்ச்சியையும் கடந்து திராவிட இயக்கம் நிலைக்க முடிந்தது.
இன்று நீதிக்கட்சி தொடங்கிய நாள். இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும்பயணத்தின் முதலடி எடுத்து வைத்த நாள் இன்று கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள், நீதிக்கட்சி தொடங்கிய நாள் என்றும் தெரிவித்தார். கொள்கை களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.