சென்னை: திருவண்ணாமலை கோயில் ராஜகோபுரத்தை மறைத்து தமிழ்நாடு அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வந்த நிலையில்,  கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றி விட்டு, 6,500 சதுர அடியில், 151 கடைகளுடன், 40 அடி வரையிலான உயரத்திற்கு, அடுக்குமாடி வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் கோபுரத்தை வழிபட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  வெகு துாரத்தில் இருந்தே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோபுரத்தை மறைக்கும் வகையில், அரசு,  வணிக வளாகம்  கட்டி வருவதால்,   கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு, பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டது. அக்கோபுரத்தின் கல்காரம் 34 அடி உயரம் கொண்டதாகும். கிழக்கு கோபுரத்தின் முன் பக்கம் 25 அடி தள்ளி  அறநிலையத்துறை சார்பில்  கடைகள் அமைய இருக்கின்றன. கோபுரத்தின் தென்புறத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் சேர்த்து 6028 சதுர அடியில் 56 கடைகளும், வடபுறத்தில் 3432 சதுர அடியில் 94 கடைகளுமென மொத்தமாக 150 கடைகள் அமைய உள்ளது.

கிழக்கு கோபுரத்தின் தென்புறத்தில் கட்டப்படும் கடைகள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை சேர்த்து 26.5 அடி உயரம் கொண்டது (அடித்தளம் 2.5 அடி, தரை தளம் 11 அடி, முதல் தளம் 11 அடி, மாடி சுவர் 2 அடி). மற்றொரு பக்கமான வடபுறத்தில் கட்டப்படும் கடைகள் 15.5 அடி உயரம் கொண்டது (அடித்தளம் 2.5 அடி, தரை தளம் 11 அடி, மாடி சுவர் 2 அடி).

.இந்நிலையில் கட்டுமான பணிகளால் அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் கடைகள் கட்டப்படுவதால் ராஜகோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என வாதிட்டார்.

ஆனால் இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்த நீதிபதிகள்,  கடைகள் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று  உத்தர விட்டனர்.

திருவண்ணாமலை ராஜகோபுரம் எதிரே கட்டப்பட உள்ள வணிக வளாக கட்டிம் 40 அடி வரையிலான உயரத்திற்கு கட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது., இந்த பணிகள் முடிந்தால் கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது சம்பந்தமாக எந்த விபரங்களையும் கோவில் நிர்வாகம் வெளியிடவில்லை  என்பதுடன், நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]