சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபான கடைகளை நிர்வகித்து வரும் டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தமிழக அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் பணியாளர்களின் சங்கங்களுடன் நவம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தை யில், டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு 20% போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கையெழுத்தானது. நவம்பர் 3-ல் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர்.