கருணாநிதி என்ன கடவுளா என்ற புத்தகத்தை எழுதிய பழ. கருப்பையாவின் கடந்தகால கருத்துக்களில் இருந்து….
a
‘ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டுக் கோவையிலே என்ன கொண்டாட்டம்? மொழி என்பது வெறும் ஒலியா? இனத்தின் முகமல்லவா! இனத்தை அழித்துவிட்டு மொழிக்கென்ன கொண்டாட்டம்? செம்மொழி மாநாட்டுக்குத் தமிழ்த்தாய் வர மாட்டாள்!’
இடையறாது எழுதிக்கொண்டிருந்தேன்.
அதிகாரத்தில் வேறு இருக்கிறாரே கருணாநிதி!
செம்மொழி மாநாட்டின் இறுதி நாளன்று (27.6.10) பிற்பகல் ஆறேழு குண்டர்கள் ‘மணக்க மணக்க செம்மொழியில்’ இரைந்து கொண்டே என் வீடு புகுந்து, என் கழுத்தினை இறுக்கி என்னைத் தாக்கிவிட்டு, வீட்டுப் பொருள்களைச் சேதப்படுத்தி, மகிழ்வுந்தையும் அடித்து நொறுக்கி விட்டுச் சென்று விட்டார்கள்!
என் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து விட்டனர்!
காவல் துறைக்கு அடித்தவர்களைத் தெரியும்; அடிக்கச் சொன்னவரையும் தெரியும் என்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை!
என்னுடைய எழுத்தின் வலிமையை அதுவரை நான் அறிந்திருக்கவில்லை! அதனுடைய ஆற்றலைக் கருணாநிதிதான் எனக்கு உணர்த்தினார்! ஒரு முதலமைச்சரால் ‘மரியாதை’ செய்யப்படுவதைவிட எழுதுபவனுக்கு வேறென்ன பெருமை வேண்டும்?
என் எழுத்துக்கு நான் பெற்ற சிறந்த விருது இதுதான்!
சக்கர நாற்காலியில் சட்டமன்றம் செல்லும் கருணாநிதி,பதவியிலிருந்து இறக்கப்பட்டால் ஒழியப் பதவியை விடுவதற்கான மனப்பழக்கம் உடையவரில்லை.
மேலும் கருணாநிதி என்ன தயரதனா? மகனுக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யப் (வானப்பிரஸ்தம்) போகலாம் என்று கருதுவதற்கு? பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா? “”எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்” என்று பற்றற்று உதறுவதற்கு!
தனக்குப் பின்னால் யார் என்பதற்குத்தான் மகன் என்பது விடையே தவிர, தன் கண்ணோடு சாவியைக் கொடுத்துவிட்டு, மகன் வாயைப் பார்த்துக்கொண்டு, எஞ்சிய காலத்தைப் பாயில் படுத்துக் கொண்டு பழைய நினைவுகளை அசைபோடும் அளவுக்கு உலக அனுபவம் இல்லாதவரா கருணாநிதி?
ஆரியர்களுக்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன?
தன்னுடைய பலம் கோபாலபுரத்தில் இல்லை; கோட்டையில்தான் இருக்கிறது என்பதை எல்லாரையும்விட நன்கு புரிந்தவர் கருணாநிதி.
கருணாநிதியைச் சாணக்கியர் என்று சொல்லி அவரை மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். எதிரியின் வலிமையை தன் மன விருப்பத்திற்கேற்றவாறு மதித்து மகிழாமல், உள்ளவாறு உணர்வதுதான் சாணக்கியம்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பங்கள் சொல்லொணா வகையில் செழிப்புற்றதுபோல, கட்சியும் வலிவு பெற முடிந்தது.
அதிகாரத்தை வைத்துப் பணம் திரட்டல்; பணத்தை வைத்து அதிகாரத்தைப் பெறல் என்னும் நச்சுச் சுற்று கருணாநிதியால் தமிழக அரசியலில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்குக் கருணாநிதி வழங்கிய கொடை இது என்று வரலாறு வரிந்து வரிந்து எழுதும்.
அவரிடமிருந்த “செல்வம்’ அவருடைய குடும்பங்களுக்குள் பங்கிடப்பட்டதுபோல, அரசியல் அதிகாரமும் பங்கிடப்பட்டது.
தமிழ்நாடு வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களும் பொறுப்பாக்கப் பெற்றனர்.
தமிழ்நாட்டு ஆட்சியில் ஒரு மகனும், மத்திய ஆட்சியில் இன்னொரு மகனும் அமர்த்தி வைக்கப்பட்டனர். மகள் மாநிலங்களவைக்கு நியமனம் பெற்றார்.
அண்ணா காலத்துக்குப் பிறகு இரா. செழியனை மெல்ல அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய அக்காள் மகன் முரசொலி மாறனை அமர்த்தி அமைச்சராக்கியதுபோல, மாறனின் மகன் தயாநிதி மாறனையும் தில்லியில் அமைச்சராக்கினார் கருணாநிதி.
தன்னுடைய சுற்றம் முழுவதையும் கோபாலபுரத்தில் பக்கம் பக்கத்தில் குடியேற்றியதுபோல, தன்னுடைய முதல் சுற்றம், இரண்டாம் சுற்றம் என்று வரிசைப்படி அவர்களின் நிலைகளுக்கும் உறவுக்கும் தகப் பதவிகளையும் பங்கிட்டவர் கருணாநிதி.
அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக் கருணாநிதி என்ன கடவுளா?